கூத்தாநல்லூர் பகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இன்று சட்டமன்றத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி குதுகலமாகியுள்ளனர். கூத்தாநல்லூர் நகராட்சியாக இருந்தாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகள் துளிகூட இல்லாமல் இருந்தது, தனி தாலுகாவாக கடந்தாண்டுதான் தரம் உயர்த்தப்பட்டது.
அந்த பகுதியில் மாணவியர்களுக்கான அரசு மகளிர் கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டும் என கூத்தாநல்லூர், பூதமங்கலம், பொதக்குடி , வடபாதிமங்கலம் உள்ளிட்ட முக்கிய நகர மற்றும் கிராமப்புற மாணவர்களும், பெற்றோர்களும் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அந்த கோரிக்கையை கிடப்பில் போட்டிருந்தது. ஆனாலும் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் கூத்தாநல்லூரில் கல்லூரி கொண்டுவருவோம் என அறிவித்திருந்தனர். தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை அதிமுக ஆட்சியில் இருக்கும்போது செயல்படுத்த தவறிவிட்டது.
அதே நேரம் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார் திருவாரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன். அவரது கோரிக்கையை ஏற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூத்தாநல்லூர் பகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பொதுமக்களும் திமுகவினரும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் .