
''டெல்லியில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறைக்குப் போனதைப் போல் தமிழக முதல்வரும் சிறைக்குச் செல்வார்'' என அதிமுக எம்பி தம்பிதுரை பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்.பி தம்பிதுரை பேசுகையில், ''ஸ்பெக்ட்ரம் வழக்கில் என்ன நடந்தது. அந்த ஊழலால் காங்கிரஸ், திமுக காணாமல் போனது. அதுபோல 1,200 கோடி ரூபாய் கொள்ளை அடித்ததன் காரணமாக திமுக அரசு வீழும் நிலையில் இருக்கிறது. உங்களுக்குத் தெரியும் டெல்லியில் என்ன நடந்ததென்று. டெல்லியில் இதுபோல தான் கெஜ்ரிவால் அரசு இருக்கும் பொழுது அவர்கள் ஆயத்தீர்வை எல்லாம் சரியா கட்டாமல் கமிஷன் வாங்கிக்கொண்டு செயல்பட்டதால் கெஜ்ரிவால் ஜெயிலுக்கு போனார்.
ஆயிரம் கோடி அல்ல எடப்பாடி பழனிசாமி சொன்னது போல, 40,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது யார்? ஸ்டாலின் அரசு. டெல்லியில் முதலில் சிசோடியா ஜெயிலுக்கு போனாரு அதன்பிறகு அப்போதைய டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜெயிலுக்கு போனார். அதுபோல செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போவது உறுதி. அதற்கடுத்து ஸ்டாலின் ஜெயிலுக்கு போகப் போகிறார். சாராய ஊழலில் ஆயிரம் கோடியல்ல, 40 ஆயிரம் கோடி ஊழல் என எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல இவர்கள் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அந்த கொள்ளையின் காரணமாக கெஜ்ரிவால் போல இவர்கள் சிறைக்குப் போவது உறுதி'' என்றார்.