






தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாளை (15.03.2025) தாக்கல் செய்ய உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் துறை ரீதியான மானியக் கோரிக்கை ஆகியவை நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என முதல்வர் ஆலோசனை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.