காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற்றும், பணி வழங்கப்படாதோருக்கு, காலிப் பணியிடங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் பணி வழங்காதது என்ன நியாயம்? என கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், ஏற்கனவே பணி வழங்கப் பெற்றோர் தவிர, தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மீதி பேருக்கும் பணி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019 மார்ச் மாதம் காவல்துறை பணிக்கு ஆள்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் உடல்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு எல்லாம் முடிந்து 10 மாதங்களுக்கு பின் அதாவது 2020 பிப்ரவரி மாதம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் தேர்வாகினர். அனைவரும் தரவரிசை பட்டியலிலும் இடம்பெற்றனர். ஆனால் அப்போது 8773 காலிப் பணியிடங்களே இருந்தன என்று 8773 பேர் மட்டுமே இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணி வழங்கப் பெற்றனர். மீதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி வழங்கப்படவில்லை.
காவல் பணி ஆள் சேர்ப்பு தொடங்கிய நாளிலிருந்து ஏற்படும் காலிப் பணியிடங்களையும் கணக்கில் எடுத்து அதன்படி பணி நியமனம் வழங்குவதுதான் மரபாக இருந்துவருகிறது. ஆனால் காவல் பணித் தேர்வு தொடங்கிய 2019 மார்ச் மாதம் முதல் 8773 பேருக்கு பணி வழங்கிய 2020 பிப்ரவரி மாதம் வரை உள்ள அந்தக் காலக்கட்டத்தில் உருவான காலிப் பணியிடங்களைக் கணக்கில் எடுக்கவில்லை. அந்த காலிப் பணியிடங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டதாகும். இந்த 10 ஆயிரம் காலிப் பணியிடங்களும் தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதாகும்.
இந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பியிருந்தாலே போதும். தேர்வில் வெற்றி பெற்று, தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெற்ற மீதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் பணிவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
பணிவாய்ப்பு வழங்க பெற்ற 8773 இரண்டாம் நிலைக் காவலர்களும் கூட, அவர்களின் பயிற்சி முடிவடைவதற்கு முன்பே களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அப்படியென்றால் காவலர் பணிக்கு இருக்கும் முக்கியத்துவம் புரிகிறது; காவல்துறையில் இருக்கும் பணியாட்கள் தட்டுப்பாடும் புரிகிறது. அப்படியிருக்கையில், தேர்வில் வெற்றி பெற்று, தரவரிசை பட்டியலிலும் இடம்பெற்ற மீதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் பணி வழங்குவதற்கு என்ன தடை என்ற கேள்வி தானாகவே எழுகிறது.
காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற்றும் பணி வழங்கப்படாதோருக்கு, காலிப் பணியிடங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் பணி வழங்காதது என்ன நியாயம்? ஏற்கனவே பணி வழங்கப் பெற்றோர் தவிர, தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மீதி பேருக்கும் பணி வழங்கக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!" இவ்வாறு கூறியுள்ளார்.