
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தில் ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்ட மணிகளும், கார்னீலியன் வகை மண் வகைகளும் இங்கு நடத்தப்பட்டுள்ள கள ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்பினால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய வரலாற்று ஆய்வாளர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், பாண்டிய நாட்டு முத்து மணிகளும், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட வண்ணக் கல் மணிகளும் கிளியோபாட்ராவின் மேனியை அலங்கரித்ததோடு அல்லாமல் அந்நாட்டின் பொருளாதார ஆணிவேரையே வீழ்த்தும் அளவிற்கு வல்லமை பெற்றிருந்தது. இதன் மூலம் பண்டைய கால தமிழர்களின் ஆபரணக்கலைகளின் தன்மையையும் அதன்பால் வெளிநாட்டினர்களுக்கு இருந்த அசைக்கமுடியாத மோகத்தையும் அறியமுடிகிறது. மேலும் சங்க இலக்கியத்தில் 381 இடங்களில் கழுத்தில் அணியும் மணிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவது தமிழர்கள் மணி ஆபரணங்கள் மீது கொண்டிருந்த மோகத்தை அறியமுடிகிறது.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தில் ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களை கொண்ட மணிகளும், கார்னீலியன் வகை மணிவகைகளும் இங்கு நடத்தப்பட்டுள்ள கள ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும் இவ்வூரில் துளையிடப்பட்ட மற்றும் துளையிடப்படாத மணிகளும் மூலகற்களும் அதிக அளவில் கிடைப்பதால் சங்க காலத்தில் மணிக்கொல்லை பகுதியில் மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது. மேற்கண்ட ஊர்களில் தயாரிக்கப்பட்ட கல்மணிகள் புதுவை மாநிலத்தில் உள்ள அரிக்கமேட்டு துறைமுகத்தின் வழியாக கிரேக்கம் , ரோமபுரி, தாய்லாந்து, இலங்கை, அரேபியநாடுகள், எகிப்து போன்ற உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் இயங்கிவந்த மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவன்மலை , பெருமாள் மலை வெங்கமேடு, காங்கேயம் , எடப்பாடி, தாளமலை, எருமைப்பட்டி, தாத்தையங்கார் பேட்டை, படியூர் போன்ற ஊர்களில் பச்சை, ஊதா, கருநீலம், மஞ்சள், கிளி பச்சை, பளிங்கு போன்ற நிறங்களில் மூலக்கற்கள் கிடைகின்றன. இந்த மூலக்கற்களைப் பெற்ற கடலூர் பகுதி கொல்லர்கள் வண்ண கல்மணிகளாக உருமாற்றம் செய்துள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் பகுதியில் வாழ்ந்த மணி தயாரிக்கும் கொல்லர்களின் தொழில்நுட்பதில் உருவான கல்மணிகள் எகிப்தில் பிறந்து ரோம சாம்ராஜ்யத்தின் அரசியாக விளங்கிய பேரழகி கிளியோபாட்ராவையே மயக்கிய பெருமைக்குரியது” என்றார்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் கலை நுணுக்கத்தை அறியும் வகையில் மணிக்கொல்லை கிராமத்தை அகழாய்வுக்கு உத்தரவிட்ட முதல்வருக்கு மணிகொல்லை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் நன்றி கூறியுள்ளனர்.