Skip to main content

திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வேட்புமனு...! ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு தாக்கல்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். 

 

parthiban


மக்களவை தேர்தலையொட்டி சேலம் தொகுதியில் திமுக சார்பில் மேட்டூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) அவரை ஆதரித்து சேலத்தில் பரப்புரை செய்தார். இதையடுத்து மதியம் 2 மணியளவில், எஸ்.ஆர்.பார்த்திபன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் ஆகிய நான்கு பேரும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனர். எஸ்.ஆர்.பார்த்திபன் 17 பக்கங்கள் கொண்ட சொத்துக்கணக்கு விவரங்கள் அடங்கிய படிவம்-26, தாக்கல் செய்துள்ளார். அவருடைய மனைவி கிருஷ்ணவேணி, மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ரூ.6 கோடிக்கு சொத்து!


அதாவது பார்த்திபன் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.72,26,834 மற்றும் அசையா சொத்துகள் ரூ.4,27,18,000 என மொத்தம் 4 கோடியே 99 லட்சத்து 44 ஆயிரத்து 834 ரூபாயும், அவருடைய மனைவியின் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.21,89,642, அசையா சொத்துகள் ரூ.77,78,300 என மொத்தம் ரூ.99,67,942 உள்ளது. மூத்த மகன் பெயரில் ரூ.12,256, இரண்டாவது மகன் பெயரில் ரூ.6,550-ம் அசையும் சொத்துகளாக உள்ளன. 


ஆக மொத்தத்தில், எஸ்.ஆர்.பார்த்திபன் தன் பெயரிலும், மனைவி, மகன்கள் பெயர்களிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகளாக ரூ.6 கோடியே 45 ஆயிரத்து 582 உள்ளதாக அபிடவிட்டில் கணக்கு காட்டியுள்ளார்.


இதில், ரூ.28.29 லட்சம் மதிப்பிலான பார்ச்சூனர் கார், ரூ.17 லட்சம் மதிப்பிலான இன்னோவா காரும் அடங்கும். அவருடைய மனைவி ரூ.4 லட்சத்தில் ஸ்விப்ட் கார் வைத்திருக்கிறார். பார்த்திபன் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று, ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான கைத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார். 


வங்கி கடன்: 


பரோடா வங்கியில் பார்ச்சூனர் கார் வாங்குவதற்காக பெற்ற கடன் நிலுவை ரூ.24,62,091, தனி நபர் கடன் நிலுவை ரூ.10 லட்சமும், எல்.ஐ.சி. பாலிசி மூலம் பெற்ற கடன் ரூ.75,500 ஆகியவை செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல அவருடைய மனைவி ஹெச்டிஎப்சி வங்கியில் தனி நபர் கடனாக ரூ.4 லட்சம், எல்.ஐ.சி.யில் ரூ.36,500, மகன்  தயாநிதி எல்ஐசியில் ரூ.65,750 கடன் பெற்று செலுத்த வேண்டியுள்ளது. அதாவது பார்த்திபனுக்கு ரூ.35,37,591, அவருடைய மனைவிக்கு ரூ.4,36,500, மகனுக்கு ரூ.67,750 கடன் பொறுப்புகள் உள்ளன.


கடந்த 2018-2019 ஆண்டில் எஸ்.ஆர்.பார்த்திபன் ரூ.4,19,978, தன் மனைவி ரூ.11,42,630 என வருமானம் ஈட்டியதாக வருமான வரிக்கணக்கு விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். அதாவது, தன்னை விட தன் மனைவி கூடுதலாக வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். 


வழக்கு இல்லை:


இவர் மீது குற்ற வழக்குகள் எதும் நிலுவையில் இல்லை. இரண்டு வழக்குகள் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு நிலையில், எப்.ஐ.ஆர். போடப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்