நடிகர் விஜய் நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். நடிகர் விஜயின் இந்த நிகழ்ச்சி அவர் அரசியலுக்கு வருவதற்குத்தான் என்று ஒரு தரப்பினரும், மாணவர்களை ஊக்குவிக்கத்தான் இந்த நிகழ்ச்சி என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ”யார் ஒருவர் ஓட்டுக்கு பணத்தை கொடுக்காமல் ஊழலை ஒழிக்கக் கூடிய ஒரு கட்சியை உருவாக்கப் போகிறேன் என்று சொல்லுவதை பாஜக வரவேற்கிறது. மக்கள் மன்றத்தில் எல்லா கட்சியும் போய் நிற்போம். மக்களிடம் நம் கொள்கைகளை சொல்லுவோம். மக்கள் தான் எஜமானர்கள். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக வரவேண்டும். தீய சக்திகள் அதனைத் தடுக்க முற்பட்டால் தமிழக மக்கள் அதனை விடப் போவது இல்லை. யார் வேண்டுமானாலும் தமிழக அரசியலை சுத்தம் செய்யட்டும். அதனை பாஜக வரவேற்கிறது“ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “தமிழக ஆளுநரை பொறுத்தவரையில் தமிழக மக்கள் மீது மதிப்பும், மரியாதையும் வைத்து உள்ளார். அமைச்சர் பொன்முடி பற்றி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினர் காவலில் வைத்துள்ளனர். இதே நிலைமை தொடர்ந்தால் அமைச்சரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டுமே தனியாக உட்கார்ந்து இருப்பார். முதல்வர் மீதும் பாஜக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. ஊழல் கறைபடியாதவர்கள் யாரும் திமுக அமைச்சரவையில் இல்லை. திமுக ஊழலைப் பற்றி பேசுவதும், வடக்கு தெற்கு என்று பேசுவது தான் காமெடி” எனத் தெரிவித்தார்.