தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டெல்லிக்குப் பறந்தார் ஆர்.என். ரவி. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசைக் கண்காணித்து ரிப்போர்ட் தரும் அசைன்மெண்ட் அவருக்குத் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மட்டுமல்லாமல், முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகளைக் கண்காணித்தும் அறிக்கை கொடுங்கள் என ஆளுநருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
டெல்லியிலிருந்து திரும்பிய ஆளுநர், தனக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்படி பல்வேறு தரப்பிலிருந்தும் பல தகவல்களை சேகரித்திருக்கிறார். இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடமிருந்தும் பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில்தான், ஆளுநரை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் வாசித்தனர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள். அந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தும் ரெய்டுகள் குறித்தும் தங்களின் ஆதங்கத்தை அதிமுக தலைவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மீண்டும் டெல்லி செல்ல ஆளுநர் ஆர்.என். ரவி திட்டமிட்டுள்ளார். இன்று மாலை அல்லது நாளை ஆளுநர் டெல்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர் டெல்லி செல்லும்போது ஏற்கனவே டெல்லி கொடுத்த அசைன்மெண்டின்படி சேகரிக்கப்பட்ட தகவல்கள், அதிமுகவின் புகார் உள்ளிட்ட கோப்புகளும் அவருடன் பறக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.