Skip to main content

அ.தி.மு.க - தே.மு.தி.க - பா.ம.க கூட்டணி உறுதி?

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
ADMK and DMDKand  PMK alliance confirmed?

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தொகுதி பங்கீடுகளை முடிவு செய்து, வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறது. அதே நேரம் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதில், அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் கூட்டணி குறித்து இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இது குறித்து இரு கட்சிகள் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. 

அதே வேளையில், அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16ஆம் தேதி 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க கூட்டணியில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது.  இது போன்று, அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு  மாநிலங்களவை இடத்துக்கும் பா.ம.க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இறுதி முடிவு எட்டப்பட்டு, அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ம.க இடையே மார்ச் 20ஆம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு, அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர், பா.ம.க தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்