இந்தியாவில் அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டன. மத்தியில் ஆளும் பாஜக, அமைச்சரவையில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியும், தங்கள் கட்சிக்குள் பெரிய மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவரை மாற்ற, அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தற்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக இருந்துவரும் நிலையில், அவருக்குப் பதிலாக ராகுல் காந்தியை காங்கிரஸ் மக்களவைத் தலைவராக நியமிக்க சோனியா காந்தி முடிவுவெடுத்துள்ளதாக அந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.
காங்கிரஸ் மக்களவைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள ராகுல் காந்தியை சம்மதிக்க வைக்க, சோனியா காந்தியும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒருவேளை ராகுல் காந்தி சம்மதிக்காவிட்டால், சோனியா காந்தியே அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்வார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.