விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் திராவிடமும் தமிழ்த்தேசியமும் தனது இரண்டு கண்கள் என்று பேசியிருந்தார். அதனை நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீரை நக்கீரன் வாயிலாக பேட்டி கண்டோம். அப்போது அவர் தன்னுடைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சி.பா. ஆதித்தனார் தொடங்கி மா.பொ.சி. வரை யாரெல்லாம் தமிழ்த் தேசிய கருத்தைப் பேசினார்களோ அவர்கள் எல்லோரும் ஆரியத்திற்குத் துணை போனவர்கள்தான் என்பது வரலாற்றில் உள்ளது. குறிப்பாக சி.பா. ஆதித்தனாரை ஆரியத்திற்கு துணை போனவர் என்று பாரதிதாசன் விமர்சித்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் தமிழ்த் தேசிய கருத்தைப் பேசுகிறவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஆரியத்திற்கு துணை போகிறார்கள் என்று சொல்லுகிறோம். திராவிட இயக்கங்கள் பேசியதைத் தாண்டி உண்மையான தமிழ்த் தேசிய கருத்து இருக்கிறதா? இந்த கருத்தியலை உள்ளடக்கித்தான் ஆரியத்திற்கு எதிரான கருத்தை திராவிட இயக்கங்கள் பேசி வருகிறது. பாரதிதாசன் விமர்சித்த நபர்கள் பேசிய தமிழ்த் தேசிய கருத்து உண்மையான தமிழ்த் தேசியம் கிடையாது. இதுதான் யதார்த்தமான உண்மை.
திராவிடம் என்ற பெயரில் திருடுகிறார்கள் என்று சீமான் பேசியிருக்கிறாரென்றால் யார் திருடர்கள்? என்பதை ஆண்மையோடு பேச சீமானுக்கு துணிச்சல் இருக்கிறதா? சீமான் இறந்த பிறகு அவரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யமாட்டார்களா என்பதுதான் அவரின் ஒரே ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதற்கு உறுதியளித்துவிட்டால் கடற்கரை கல்லறை விஷயத்தை அவர் விட்டுவிடுவார். அந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் ஜெயலலிதாவை இரண்டு ஆண்களுக்கு நடுவில் படுத்திருக்கிறார் என்று விமர்சித்திருந்தார். எந்த கடற்கரையைக் காப்பதற்கு திராவிட இயக்கம் தவறியது என்ற பட்டியலை சீமான் கொடுக்க வேண்டும். மைக் கிடைத்ததற்காக எதையாவது அவர் பேசக் கூடாது. ஆதாரத்துடன் பேச வேண்டும்.
எந்த மொழி மற்றும் மண் வளங்களைக் காக்க திராவிட இயக்கம் தவறியிருக்கிறது. சீமான் சொன்ன அனைத்து வளங்களுக்களையும் பாதுகாத்து தமிழ்நாட்டை தனித்தன்மையோடு வைத்திருக்கும் இயக்கம் திராவிட இயக்கம் என்பதை நாடறியும். எனவே புதிய வகுப்புகளை சீமான் எடுக்கக் கூடாது. சினிமாவில் சீமான் வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதைப் பாதுகாப்பான கட்டமைப்பாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு என்பதை சீமான் மறந்துவிடக்கூடாது. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சீமான் பேசியிருந்தார். அந்த அம்மா ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று வந்தார். அந்த அம்மாவை எதிர்த்துப் பேச சீமானுக்கு துணிச்சல் இல்லை. அண்மையில் இ.பி.எஸ். போல் நல்ல நிர்வாகியைப் பார்க்கவே முடியாது என்றும் சீமான் பேசியிருக்கிறார். திராவிடத்தை எதிர்ப்பதாக இருந்தால் உண்மையிலேயே தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. எதிர்ப்பை மட்டும்தான் சீமான் காட்டுவார்.
காமராஜர் படிக்க வைத்தார், கலைஞர் குடிக்க வைத்தார் என்று சீமான் சொல்லியிருக்கிறார். அவருடைய மூதாதையராக இருந்த ராஜகோபாலாச்சாரி மூடிய 6000 பள்ளிகளைத்தான் காமராஜர் திறந்து வைத்தார். காமராஜர் ஆட்சியிலிருந்து இறங்கியபோது கூடுதலாக 1930 பள்ளிகளைச் சேர்த்து மொத்தமாக 7930 பள்ளிகளைத் திறந்து வைத்தார். ஆனால் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 34,830. அவருடைய பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைக்காமல் சீமானின் முன்னால் காதலி விஜயலட்சுமி பெயரயா வைக்க முடியும்?. அரசுத் திட்டங்கள் பெயர் குறித்து விமர்சிப்பதற்கு சீமான் தகுதியற்றவர்.
பிரபாகரனைத் தலைவராக சீமான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் என்னைப் போன்றவர்கள் நெடுங்காலமாகச் சொல்லிவரும் செய்தி. அதைத்தான் அவர் வெளிப்படுத்தி வருகிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஈழத்தில் இருந்தபோது அவரிடம் நாடு திரும்பும்போது உங்களுக்கு என்ன வேண்டுமென்று பிரபாகரன் கேட்டார். அதற்கு வைகோ கைப்பட கலைஞருக்குக் கடிதம் எழுதிக்கொடுங்கள் என்று பதிலளித்தார். அப்போது பிரபாகரன் எழுதிய கடிதத்தில் தமிழ் மொழி திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இது ஆமைக் கறி கேட்ட சீமானுக்கு தெரிந்திருக்காது. விடுதலைப் புலிகளின் தலைவரை முனியாண்டி விலாஸ் ஓனர் போல் சித்தரித்தவர்தான் சீமான் என்றார்.