வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19/11/2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் நடைமுறைகள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்!
நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. ஒரு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் இரு அவைகளிலும், புதிய மசோதா அமல்படுத்தப்பட்டு, பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து மசோதாவானது குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும். பின்பு, மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், அது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும். இந்த நடைமுறைதான் சட்டத்தை வாபஸ் பெறுவதற்கும், ரத்து செய்வதற்கும்.
அவசரச் சட்டம் கொண்டு வந்தும் இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யலாம். மத்திய அமைச்சரவை கூடி சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிப்பார்கள். பின்னர், குடியரசுத்தலைவர் பிரகடனம் செய்வார். நாடாளுமன்றத்தின் அவை கூடிய ஆறு வாரத்திற்குள் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி.