பாஜக கட்சியைச் சேர்த்த முதல்வர், உட்கட்சிப் பூசலால் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத். பாஜகவைச் சேர்ந்த இவர் மீது, சக எம்.எல்.ஏக்கள், மாநில பாஜக தலைவர்கள் ஆகியோர் அதிருப்தியடைந்தனர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இவர் மீது அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலை வெல்ல முடியாது என பாஜக மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
இதனையடுத்து, அவர் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்தநிலையில் பாஜக தேசிய தலைமையைச் சந்தித்துப் பேசிய திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பை வேறு ஒருவருக்கு வழங்க கட்சித் தலைமை நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் "இந்த மாநிலத்திற்கு நான்கு ஆண்டுகள் சேவை செய்ய கட்சி எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அளித்தது. இத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போது முதல்வராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கட்சி முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.