மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், இன்று (23-11-24) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 51 இடங்களில் மட்டுமே முன்னிலை வருகிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க 78 இடங்களில் வெற்றி பெற்றும் 55 இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
அதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் 41 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஜெ.எம்.எம். - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 56 இடங்களிலும், பாஜக கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜெ.எம்.எம். கட்சி 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் ஜெ.எம்.எம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆணையை வழங்கிய ஜார்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரன், அனைத்து காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் வாழ்த்துகள். மாநிலத்தில் கூட்டணியின் இந்த வெற்றி அரசியல் சாசனத்துடன் நீர், காடு, நிலம் பாதுகாக்கப்பட்டதற்கு கிடைத்த வெற்றியாகும். மகாராஷ்டிராவின் முடிவுகள் எதிர்பாராதவை, அவற்றை விரிவாக ஆராய்வோம். ஆதரவளித்த மாநிலத்தின் அனைத்து வாக்காளர் சகோதர சகோதரிகளுக்கும், உழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.