உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் 18 வதுநாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்ட மன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடனும், பாஜகவுடனும் கூட்டணி அமைத்து நாடாளுமன்றம் சட்ட மன்ற தேர்தலை சந்தித்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில், தெலுங்கு தேசம் கட்சி 127 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும்,பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெறும் 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. ஆந்திர மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 88 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தனிப்பெரும்பான்மையும் தாண்டி தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ். தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்கள் மட்டுமே பெற்றுப் படு தோல்வியை சந்தித்தது. பின்பு முதல்வரான ஜெகன் மோகன் மக்களுக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். இருப்பினும் அனைத்து மக்களின் ஏகோபத்திய வரவேற்பை அதிகாரத்திற்கு வந்த பிறகு ஜெகன்மோகனால் பெறமுடியவில்லை. அதன் காரணமாக அவரது ஆட்சியின் மீது மக்களுக்கு சில அதிருப்தி இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சராக இருந்தபோது, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாக கூறி சந்திரபாபு நாயுடுவை ஜெகன் மோகன் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சந்திரபாபு மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியது. 50 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த சந்திரபாபு நாயுடு மக்களின் அனுதாபத்தை வாக்காக அறுவடை செய்ய திட்டமிட்டிருந்தார். மேலும் ஆந்திராவில் சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஜெகன்மோகனின் ஆட்சி எதிராக ஒன்று திரட்டி கூட்டணி அமைத்தார். அதற்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. தற்போது ஆட்சி அமைக்கத் தேவையான இடத்தையும் தாண்டி தனிப்பெரும்பான்மை கட்சியாக ஆட்சி அமைக்கவுள்ளது தெலுங்கு தேசம் கட்சி. ஜாமீனில் வெளியே வந்து ஜெகனை சம்பவம் செய்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.....