சென்னையில் எஸ்.பி.ஐ டெபாசிட் இயந்திரங்கள் குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், கைது செய்யப்பட்ட அமீரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட அமீரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் நண்பனான வீரேந்தருடன் சேர்ந்து 6 இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். சென்னை ராமாபுரம், சின்மயா நகர், பாண்டி பஜார், வடபழனி, வேளச்சேரி, தரமணி பகுதிகளில் கொள்ளையடித்ததாக அமீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதேபோல் கோவையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக, போதையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அருணகிரி என்ற நபரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இதேபோல் புதுச்சேரியில் போலி எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டு மூலம் கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி மணப்பட்டில் எஸ்பிஐ ஏடிஎம்மில் போலி ஏடிஎம் கார்டு மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்து வந்த 3 பேர் போலி ஏடிஎம் கார்டைப் பயன்படுத்திப் பணத்தைத் திருடியதாக வங்கி மேலாளர் சாந்தி புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.