
பெண் நடன கலைஞருடன் ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவரை, கட்சியில் இருந்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான பாபன் சிங் ரகுவன்ஷி, பா.ஜ.கவில் பொறுப்பு வகித்து வந்தார். பா.ஜ.க மூத்த தலைவரான இவர், ரஸ்ராவில் உள்ள கிசான் கூட்டறவு ஆலையின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவர் ஒரு பெண் நடனக் கலைஞருடன் ஆபாசமான முறையில் நடந்துகொண்டது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
திருமண கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தோன்றும் அந்த வீடியோவில், ரகுவன்ஷி ஒரு பெண் நடனக் கலைஞரை மடியில் வைத்துக் கொண்டு ஆபாசமான முறையில் நடந்துகொள்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் ரகுவன்ஷிக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ரகுவன்ஷி, ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த வீடியோ போலியானது. கட்சிக்குள் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்ட சதி. இதன் பின்னணியில் எம்.எல்.ஏ. கேதகி சிங்கின் குடும்பத்தினர் உள்ளனர்.
பீகாரில் உள்ள துர்கிபூர் கிராமத் தலைவரின் திருமண ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. இந்த நிகழ்வில் சிங்கின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். என்னை அவதூறு செய்ய இதை அவர்கள் ரகசியமாக படமாக்கினர். நான் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் செய்ததில்லை. நான் இப்போது ஒரு வயதானவன்’ என்று கூறினார். இருப்பினும், பா.ஜ.க கட்சித் தலைமை ரகுவன்ஷியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.