பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழுவின் பரிந்துரை புத்திசாலித்தனமான யோசனை அல்ல என ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையிலான குழு கடந்த வாரம் தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது. இதில், பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க உரிய சட்டத்திருத்த நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மொஹந்தி குழுவின் இந்த பரிந்துரை, நாட்டின் நிதி அமைப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கத்தை அதிகரிக்கும் எனக் கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன், "பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது மோசமான யோசனை. இது, ஒரு சில கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதார அரசியல் அதிகாரத்தைக் குவிக்க வழிவகுக்கும். நிறைய வங்கிகளைத் திறப்பது அரசாங்கத்துக்கு அவசியமானது என்றாலும் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பது என்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.