Skip to main content

‘ஹாட்ரிக் வெற்றி’ - இஸ்ரோ பெருமிதம்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'Hatrick win' - ISRO proud

விண்ணுக்கு செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்று பூமிக்கும் என்று திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட சோதனையும் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஏவுகணை தரையிறங்கும் பரிசோதனையில் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெற்றியை இஸ்ரோ அடைந்தது. இது ஒரு ஹாட்ரிக் வெற்றி ஆகும். இந்த சோதனை இன்று (23.06.2024) காலை 07.10 மணியளவில் வெற்றியடைந்தது. ‘புஷ்பக்’ ஒரு துல்லியமான கிடைமட்ட தரையிறக்கத்தை செயல்படுத்தியது. சவாலான சூழ்நிலையில் மேம்பட்ட திறன்களை இந்த சோதனை காட்டுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜே. முத்துப்பாண்டியன் என்பவர் திட்ட இயக்குநராகவும், பி. கார்த்திக் என்பவர் ஏவுகணையின் இயக்குநராகவும் உள்ளனர். இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி குழுவினருக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் உன்னிகிருஷ்ணனும் இந்த குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Sunita Williams Travel to Space Center

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ‘அட்லஸ் - வி’ என்ற ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி கடந்த மாதம் 7 ஆம் தேதி (07.05.2024) காலை 08.04 மணிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கேப்டன் விச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணத்தை மேற்கொள்ள இருந்தனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.

இத்தகையச் சூழலில் இவர்கள் இருவரும் பயணிக்க இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் புறப்படுவதற்கு முன்னர் கடைசி நேரத்தில் (அதாவது 30 நிமிடத்திற்கு முன்னதாக) தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றைய பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் பயணம் கடந்த மாதம் 8 ஆம் தேதி (08.05.2024) காலை 07.40 மணிக்குச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. போயிங் ஸ்டார்லைனர் திட்டத்தின் அடலஸ் - வி ராக்கெட்டின் ஆக்சிஜன் குழாய் புதிதாக மாற்றப்பட்ட பிறகு மே 17 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்கிறார் என நாசா சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தப் பயணமானது பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

Sunita Williams Travel to Space Center

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவருடன் புட்ச் வில்மோரும் பயணம் செய்கிறார். இதன் மூலம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய பயணமானது இந்திய நேரப்படி இன்று (05.06.2024) இரவு 08.17 மணியளவில் நிறைவேறி உள்ளது. 

Next Story

‘குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா’ - தமிழக அரசு அறிவிப்பு!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Space Park in Kulasekaranpattinam' - Tamil Nadu Government Announcement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ரூ. 950 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது விண்வெளி நிலையத்தை நிறுவுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் விண்வெளி குறித்த ஆய்வு திறன்களை மேம்படுத்துவதையும் செயற்கைக்கோள் ஏவுதலை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO - டிட்கோ) விண்வெளி தொடர்பான முயற்சிகளில் மாநிலத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU - எம்.ஓ.யு.) கையெழுத்திட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து டிட்கோ சார்பில் தெரிவிக்கையில், “இந்த முயற்சியானது விண்வெளித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு என்ற சமீபத்திய அறிவிப்பை சாத்தியப்படுத்தியுள்ளது. இது உலக முதலீட்டாளர்களை குறிப்பாக தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி துறையில் பங்கேற்க வைக்கும் முயற்சி ஆகும். இந்த பூங்கா விண்வெளி ஆராய்ச்சி, அதன் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும். இது உலகளாவிய விண்வெளி அரங்கில் தமிழகத்தின் நிலையை மேம்படுத்தும். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து இந்தியாவின் ஆற்றல்மிக்க மற்றும் முக்கிய மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.