
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இன்று (16.05.2025) மாலை 3 மணியளவில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறையின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் வைத்து விசாகனிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரின் மனைவியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள மேகநாதன் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேகநாதன் தமிழக மின்வாரியத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்தவர். ஓய்வு பெற்ற பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் மூலம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனுக்கு தொழில் தொடர்பு இருந்ததாக தகவல் வர, தற்போது மேகநாதனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.