Skip to main content

“பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டுகிறார்”- இளம்பெண் பரபரப்பு புகார்

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

 

girl complain of misbehaving with her in   threatening her personal video

தூத்துக்குடியில் அஜித்குமார் என்ற இளைஞர் குளிர்ப்பானதில் மயக்கமருந்து கலந்து கொடுத்து வன்கொடுமை செய்ததாகவும், பின்பு அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் நம்மிடம் பேசிய போது, “நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த ஜேக்கப் தினகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். என் கணவர் ஜேக்கப் தினகரன் உடல்நல குறைவால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022 ஆகஸ்ட் மாதத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு நானும் எனது மகளும் எனது வயதான பெற்றோருடன் வசித்து வருகிறோம். என் வீட்டின் எதிரில் ஒரு கார் ஒர்க் ஷாப் உள்ளது அங்கு தூத்துக்குடி டூவிபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலு என்பவரின் மகன் அஜித்குமார் (29) அடிக்கடி வருவார். 

நான் ஒரு ஜெராக்ஸ் கடை வைத்துள்ளேன். என்னுடைய ஜெராக்ஸ் கடைக்கும் அடிக்கடி வருவார். செகனண்ட் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தார். அவ்வப்போது ஏதாவது ஒர்க் கொடுப்பார். நான் செய்து கொடுப்பேன். அடிக்கடி கடைக்கு வந்து சென்றதால் நான் நண்பராக பழக ஆரம்பித்தேன். கடந்த 2024 ஜூலை 2 ஆம் தேதி அஜித்குமார் என்னிடம் வந்து எனக்கு பர்த் டே என்றும், எல்லா ப்ரண்ட்ஸ்க்கும் பர்த் டே பார்ட்டி வைப்பதாகவும் கூறி என்னை அழைத்தார். நான் அஜித்குமார் கூறியதை நம்பி அவருடன் சென்றேன். அவருடைய அத்தை ஹேமா என்பவரது வீடு எனக் கூறி அண்ணா நகர் 5வது தெரு மூன்றாவது கிராஸ் ரோட்டில் உள்ள ஒரு மாடி வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு நான் போன போது அந்த வீட்டில் யாரும் இல்லை. ப்ரண்ட்ஸ் வருவார்கள். அதுவரை இந்த ஜூஸ் மற்றும் கேக்கை சாப்பிடு என கொடுத்தார்.

girl complain of misbehaving with her in   threatening her personal video

நான் கேக் சாப்பிட்டு விட்டு ஜூஸ் குடித்தேன். சிறிது நேரத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை.  நான் மயக்கம் அடைந்து விட்டேன்.  பின்னர்  மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தபோது எனது  ஆடைகள் அவிழ்க்கப்பட்டு  நிர்வாணமாக இருந்தேன். அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்த அஜித்குமாரிடம் ஏன் இப்படி என்னைச் சீரழித்தாய் என கேட்டபோது, ‘உன்மேல எனக்கு ஒரு கண்ணு.... உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இதை வெளியே சொன்னால் உன்னைக் கொலை செய்து விடுவேன்’ என திமிராக பேசி உடலுறவு வீடியோவை என்னிடம் காண்பித்து இதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினான். நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அதன் பிறகு அந்த வீடியோவை காண்பித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். நீ புருஷன் இல்லாமல் தானே இருக்கிறாய் நான் கூப்பிடும் போது கண்டிப்பாக வரவேண்டும் என மிரட்டி பலமுறை வரவழைத்து அவன் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக என்னை அடித்து துன்புறுத்தி வன்கொடுமை செய்தார். உயிரிழந்த என் கணவர் பி.எப். பணம் என்னிடம் இருப்பதை தெரிந்து வைத்திருந்தார்.  அதனால் நான் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும் என மிரட்டி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை என்னிடம் ரூ.10 லட்சம் வரை பணத்தையும் 6 சவரன் தங்க நகை, பிரேஸ்லெட், மோதிரம் வாங்கியுள்ளனர். இப்போது என்னிடம் இருந்த பணம் அனைத்தும் காலியாகிவிட்டது.

இந்நிலையில் பணம் தரவில்லையெனில் உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி வருகிறார். ஏப்ரல் 5ஆம் தேதி என் வீட்டின் அருகில் உள்ள கார் ஒர்க் ஷாப்பில் அஜித்குமார் நின்று கொண்டிருந்தார். நான் அங்கு சென்று என்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தைக் கொடு என கேட்டேன். அன்று இரவு 9 மணி அளவில் அஜித் குமார் தூண்டுதலில் அவரது நெருங்கிய கூட்டாளிகள் செந்தில்குமார், கன்னிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து என்னை பொதுவெளியில் ஆடையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார்கள்.  அஜித்குமார், செந்தில்குமார் மற்றும் கன்னிமுத்து ஆகியோர் கூட்டு சேர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதையும், எனக்கு திரும்பக் திரும்ப கொலை மிரட்டல் விடுவதையும் வேலையாக வைத்துள்ளனர். 

என் ஜெராக்ஸ் கடைக்கு வந்து அங்கிருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்  உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கியும், என்னையும் தாக்கி காயப்படுத்தினர். இதை தட்டிக் கேட்கச் சென்ற எனது தந்தையை கடந்த மாதம் தாக்கி காயப்படுத்தினர்.  காயமடைந்த எனது தந்தை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 8 நாள்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரில்  தென்பாகம் போலீசார் சி.எஸ்.ஆர் மட்டும் போட்டு முடித்துவிட்டுத் தாக்கியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. செகனண்ட் கார் வாங்கி விற்பதாக என்னிடம் தெரிவித்தது பொய்யான தகவல். அவர் அரிசி கடத்தல் தொழில் செய்கிறார் என்பது எனக்கு அப்புறம் தான் தெரிய வந்தது.  

அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள  காவல்நிலையத்தில் அஜித்குமாருக்கு வரவு செலவு உள்ளதால் அவருக்கு  சாதகமாகத்தான் போலீஸும் நடந்து கொண்டது. அதன் பிறகு அரிசி கடத்தலை நான் வீடியோ எடுத்தேன். அதைத் தெரிந்து கொண்டு என்னை மீண்டும் வந்து அடித்தார். நான் தூத்துக்குடியை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். அதுக்கும் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் எந்த எப்.ஐ.ஆர்.ரும் போடவில்லை. சி எஸ் ஆர் காப்பி மட்டும் கொடுத்தார்கள்.  பணம் கேட்டு தொடர்ந்து அஜித்திடம் இருந்து மிரட்டல் வருகிறது. ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்‌  

வீடியோ வெளியே தெரிந்தால் அசிங்கம் என பயந்து கொண்டே இருந்தேன். பொள்ளாச்சி வழக்கில் வந்த ஜட்ஜ்மெண்டை பார்த்துட்டு எனக்கு தைரியம் வந்துச்சு. நமக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எஸ்பியிடம் கம்ப்ளைன்ட் தெரிவித்திருக்கிறேன்” என்றார். மேலும் அஜித் குமார் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் ஒரு வீடியோவையும் அவர் போலீசில் ஒப்படைத்து இருந்தார். பகீர் கிளப்பும் இந்த கம்ப்ளைன்ட்டை  மகளிர் காவல் நிலையத்திற்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பார்வார்ட் செய்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார்.

இது குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அஜித் குமார், செந்தில் குமார், கன்னி முத்து ஆகிய 3 பேர் மீது பிஎன்எஸ் ஆக்ட்டில் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை நேற்று (மே 15) தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைகளை முடித்துள்ளனர்.   இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்.ஐ. சுகந்தி ஆகியோர் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே அரிவாளால் கேக் வெட்டியது தொடர்பாக தென்பாகம் போலீசார் அஜீத்குமார் மீது தனியாக ஒரு வழக்குப்பதிந்து அந்த வழக்கில் அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்துள்ளனர். கைதான அஜித்குமார் மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித்குமாரின் சகோதரி,  தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் அதில் ஒரு இளம் பெண் தங்களிடம் இருபது லட்சம் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எனது கணவர் மற்றும் அண்ணனை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய் புகார் அளித்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

சார்ந்த செய்திகள்