
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
அவ்வாறு குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம். மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இன்று (15.05.2025) அனுப்பி இருந்தார்.
அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா?. அத்தகைய அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா?.
இந்த தீர்ப்பை அளிப்பதற்கு முன்பு இத்தகைய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?’ என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் இதனை உச்சநீதிமன்றத்தில் விசாரிப்பதற்காகச் சிறப்பு அரசியல் சாசன அமர்வு நாளை (16.05.2025) அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த கேள்விகளை விசாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்க்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்த்தெறிய முயற்சிக்கும் மத்திய அரசின் ஜனாதிபதி குறிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சியே தவிர வேறில்லை. இது சட்டத்தின் மகத்துவத்தையும், அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளராக உள்ள உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் நேரடியாக சவால் விடுக்கிறது. ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபனை இருக்க வேண்டும்?. மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் கால தாமதத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா? பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?.
நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. இந்தக் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் இந்த சட்டப் போராட்டத்தில் பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களும், கட்சித் தலைவர்களும் இணையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இதனை நாம் நமது முழு பலத்தோடு எதிர்த்துப் போராடுவோம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.