இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி, போராட்டம் என பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று (21.12.2021) மாநிலங்களவை கூடிய சிறிது நேரத்தில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறிய தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையில், நீட் தேர்வை இரத்து செய்யும் விவகாரத்தை திமுக எம்.பிக்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து, மக்களவையும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுநாளோடு முடிவுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.