
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் படித்த பல ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த பள்ளியை தமிழ்நாடு அரசு மாதிரிப்பள்ளியாக மாற்றி தரம் உயர்த்தி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. தேவையான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் இந்த வருடம் +2 பொதுத் தேர்வில் 58% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே கடைசி இடத்தில் இருந்தது. இதனால் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் குறைந்திருந்தது. இதனால் பள்ளி நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஆசிரியர்களை பணி இடமாறுதல் செய்ய வேண்டும் என்று அறந்தாங்கி வர்த்தக சங்கம் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இன்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 66% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மாதிரிப் பள்ளி பொதுத் தேர்வில் மோசமான இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் நேற்று அறந்தாங்கி நகரத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, தலைமை ஆசிரியர் பாட ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்கள் மாணவர்கள் சரியில்லை, பள்ளிக்கு வருவதில்லை, நாங்க சொல்றதை கேட்பதில்லை என்று மாணவர்கள் மீதும் குற்றம் சாட்டினர். மேலும் ஜூன் மாதம் நடக்கும் துணைத் தேர்வில் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதாக உறுதி கூறினார்கள்.
ஆனால், ஆசிரியர்கள் சொன்ன காரணங்களை ஏற்க முடியவில்லை. அறந்தாங்கி பெயரையே கெடுத்துட்டீங்க. 85 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது எவ்வளவு பெரிய விஷயம். இதை ஏன் எஸ்எம்சி, பிடிஏ, அதிகாரிகள், பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு போய் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர முயற்சிக்கவில்லை மேலும், இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் மத்தியிலேயே ஜாதிய பிரச்சனைகள் அதிகமாக உள்ளதாகவும் சொல்றாங்க அதனால மாணவர்களை கண்டு கொள்ளவில்லை என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்களும் தன்னார்வலர்களும் பேசினர். இனி வரும் காலங்களில் இப்படி நடக்காமல் பார்க்க வேண்டும் என்று கூறிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பள்ளிக்குச் சென்று அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயந்தி, தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்களிடம் தேர்வு முடிவுகள் ஏன் இப்படி மோசமானது என்று கேட்க வழக்கம் போல மாணவர்கள் சரியில்லை என்ற பதிலையே கூறியுள்ளனர்.
அப்போது, பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ''நீங்கள் சொல்லும் காரணங்களை ஏற்கமுடியாது. அறந்தாங்கி மாடல் ஸ்கூல் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கடைசி இடத்திற்கு வருதுன்னா எப்படி ஏற்க முடியும். மாணவர்களை குறை சொல்றதை நிறுத்திட்டு அவர்களை மாற்ற வேண்டும் அது தான் மாதிரிப்பள்ளி. சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் குறைந்தது 90% தேர்ச்சியை கொடுக்கிறார்கள். மாடல் பள்ளியின் மாடலே வேற மாதிரி இருக்கு. வெளியே சொல்ல முடியல. இனி வரும் காலங்களில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் தயாராக வேண்டும்'' என்றார் வேதனையோடு.
இது குறித்து அப்பள்ளியின் பெற்றோர்கள் நம்மிடம்.. 'கடந்த ஆண்டு பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்பா பள்ளியில் குப்பை குவியல், உடைந்து கிடந்த மேஜைகள் என அவலட்சனத்தைப் பார்த்து பயங்கர கோபமாகி தலைமை ஆசிரியரை கடிந்து கொண்டார். உள்கட்டமைப்பு மட்டுமல்ல மாணவர்களின் வாசிப்புத் திறனும் மோசமாக இருப்பதைப் பார்த்து எல்லாத்தையும் மாற்றுங்கள் என்று எச்சரித்துச் சென்றார். ஆனால் அதை இந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டுக்கல. பக்கத்திலேயே இருக்கும் மாவட்ட கல்வி அலுவலரும் கண்டுகொள்ளவில்லை. அதன் பலன் தான் இன்று அறந்தாங்கி மாதிரிப் பள்ளி தலைகுனிந்து நிற்கிறது.
மேலும் மாணவர்களை திருத்த வேண்டிய சில ஆசிரியர்கள் பள்ளியிலேயே மாணவர்கள் மத்தியில் செல்போனில் சூதாட்டத்தில் கூட ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதையும் சரி செய்யத் தவறியதால் தான் இந்த லட்சனத்துக்கு காரணம். +2 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று காரணம் சொன்ன ஆசிரியர்கள் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு என்ன காரணம் சொல்லப் போறாங்களோ. மொத்தத்தில் வர்த்தக சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த ஆசிரியர்களை மொத்தமாக மாற்றியமைத்தால் தான் வரும் வருடங்களில் நல்ல தேர்ச்சிக்கு வழிவகுக்கும்' என்றனர்.