
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறித்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. 3 நாட்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களை குறித்து பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் இந்தியா முறிஇந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் அனைவரும் பிரதமர் மோடியின் காலில் விழ வேண்டும் என மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜக்தீஷ் தேவ்டா கூறியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அரசாங்கத்தில் பா.ஜ.க மூத்த தலைவரான ஜக்தீஷ் தேவ்டா அம்மாநில துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “ஆயுதப்படைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைவணங்க வேண்டும். பஹல்காம் பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளிடம் மதம் குறித்து கேட்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் என் மனதில் மிகுந்த கோபம் இருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் சுடப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கொல்லப்பட்டனர். நாடு பழிவாங்க விரும்பியது. பிரதமருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். முழு நாடும், நாட்டின் இராணுவமும், வீரர்களும் பிரதமர் மோடியின் காலடியில் தலைவணங்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் பொறுப்பு பாராட்டுக்குரியது. இன்று முழு நாடும் ராணுவத்தினரின் காலில் தலைவணங்குகிறது” எனப் பேசினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தினர் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜக்தீஷ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை அளித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான லெப்டினண்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகளை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி பயங்கரவாதிகளின் சகோதரி என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசி சர்ச்சையை கிளப்பினார். இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதன் பேரில், போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்த விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் அடங்குவதற்குள், மற்றொரு பெண் அதிகாரியான விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் சாதியை வெளிப்படுத்தி சமாஜ்வாதி கட்சி ராம்கோபால் யாதவ் பேசியது சர்ச்சையாக மாறியது. வியோமிகா சிங் ஹரியானாவைச் சேர்ந்த ஜாதவ், ராஜபுத்திர பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வியோமிகா சிங்கை பா.ஜ.கவினர் விமர்சிக்கவில்லை என்று ராம்கோபால் யாதவ் கூறினார். இவரது பேச்சு சர்ச்சையாக மாறியதை அடுத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், இந்திய ராணுவம் பிரதமர் மோடிக்கு தலைவணங்க வேண்டும் என மத்தியப் பிரதேச துணை முதல்வர் பேசியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தங்களது உயிர்களை துட்சமென நினைத்து இந்தியாவுக்காக எல்லையில் போராடி வரும் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.