மஹாராஷ்ட்ராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணி உடைந்தது. இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது.
இந்தநிலையில் சமீபத்தில் சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்ரே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். மராத்தா இடஒதுக்கீடு காரணமாக இந்த சந்திப்பு நடைபெற்றாலும், சிவசேனா பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்து ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோரும் சந்தித்துக்கொண்டனர். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயார் என மஹாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைமை அறிவித்தது காங்கிரஸ் அதிருப்தியடைந்ததாக வெளியான தகவலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.
இதனால் தற்போது நடைபெற்றுவரும் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில் சிவசேனா எம்.பியும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ரவுத், கூட்டணி ஆட்சி 5 வருடங்களை நிறைவு செய்யும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு அரசை நடத்த உறுதிபூண்டுள்ளன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே விரிசல்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால் அது பயனளிக்காது" என கூறியுள்ளார்.