
அமெரிக்க பாட்காஸ்டரும், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் மோடி நேரடி உரையாடல் ஒன்றை நடத்தினர். இதில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அதில் ஒரு பகுதியாக குஜராத் கோத்ரா கலவரம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பேசியதாவது, “2002-க்கு முந்தைய தரவுகளை நீங்கள் மதிப்பாய்வு செய்தால், குஜராத் அடிக்கடி கலவரங்களை எதிர்கொண்டதை நீங்கள் காண்பீர்கள். ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து விதிக்கப்பட்டது. பட்டம் பறக்கும் போட்டிகள், சைக்கிள் மோதல்கள் போன்ற அற்ப விஷயங்களால் வகுப்புவாத வன்முறை வெடிக்கும். ஆனால் 2002க்கு பிறகு எந்த வகுப்புவாத வன்முறையும் குஜராத்தில் இல்லை. அப்போது மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த எங்களுடைய அரசியல் எதிரி வேண்டுமென்றே எங்கள் மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் வைக்க நினைத்தனர். நாங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.
அவர்களது இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த விவகாரத்தின் நிலைமையை கண்டறிந்த நீதிமன்றம் எங்களை நிரபராதி என்று உறுதி செய்தது. கற்பனை செய்யமுடியாத அளவிற்கு மிகப்பெரிய துயரம் நடந்தது. மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர், காந்தஹர் விமானக் கடத்தில், பாராளுமன்றத் தாக்குதல் போன்ற சம்பவங்களின் பின்னணியில் பலர் கொல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு நிலைமை எவ்வளவு பதற்றமாக இருந்தது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த வன்முறை நடந்தது.

வெறும் எட்டு முதல் பத்து மாதங்களுக்குள் 2001 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்கள், நாடாளுமன்றம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் மீதான தாக்குதல் போன்ற உலகளாவிய பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. மிகவும் சவாலான காலகட்டம் அது. குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது நிலநடுக்கத்தால் குஜராத் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதை தொடர்ந்து, பதவியேற்ற முதல் வருடத்திலேயே கலவரங்கள் நடந்தது” எனத் தெரிவித்தார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 1700 பேர் அயோத்திக்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அகமதாபாத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சிலர் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பியபடி இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, எஸ் 6 பெட்டியில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தீ வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என மொத்தம் 59 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. அந்த வகையில் பஞ்ச மஹால் மாவட்டம் கலோல், டெலோல் மற்றும் டெரோல் நிலையம் ஆகிய இடங்களில் வன்முறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.