Skip to main content

மாணவிகள் கெஞ்சியும் விடாத இளைஞர்கள்; ஹோலி கலர் பொடியால் நேர்ந்த அசம்பாவிதம்!

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

8 girls admitted in hospital for holi powder in karnataka

வடமாநிலங்களில் இந்து சமூக மக்களால் வெகு விமர்சையாக ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, ஒருவர் மீது ஒருவர் எந்தவித வேறுபாடுமின்றி வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டாடுவர். இந்த பண்டிகை நேற்று (14-03-25) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தோடு ஒத்துப்போனதால் வடமாநிலங்களில் பதற்றம் அதிகரித்தது. இதனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளான ஜமா மசூதி, அலிகார், ஷாஜஹான்பூர் உள்ளிட்ட 10 மசூதிகளுக்கு தார்பாய்களால் மூடப்பட்டது. 

இந்த நிலையில், ஹோலி கலர் பொடியால் மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டம், லஷ்மேஷ்வரம் அருகே சுவர்ணகிரி தாண்டாவைச் சேர்ந்த  8 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் 10 மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தனர்.

அப்போது, ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் விதமாக இளைஞர்கள் குழு அங்கு வந்து, ஹோலி கலர் பொடிகளை தெளிக்கத் தொடங்கியுள்ளானர். கலர் பொடியில் சேர்க்கப்பட்ட மாட்டு சாணம், முட்டை, உரம் மற்றும் ரசாயணம் கலந்த தண்ணீரையும் மாணவிகள் மீது தெளித்துள்ளனர். தேர்வு எழுத வேண்டும் என்று மாணவிகள் கெஞ்சினாலும், அந்த இளைஞர்கள் குழு கேட்காமல் அவர்கள் மீது வண்ணங்களைத் தெளித்துள்ளனர்.

துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், மாணவிகள் வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனர். சில மாணவிகளுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆசிரியர்கள், மாணவிகளை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 8 மாணவிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், விரைந்து வந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்