Skip to main content

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

shaktikanta das

 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள், பெட்ரோல் மீதான வரியைக் குறித்து பெட்ரோல் - டீசல் விலையை சிறிதளவு குறைத்துள்ளனர். இருப்பினும் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

இந்தநிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், சமீபத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கை குழு கூட்டத்தில், “பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்க மத்திய மாநில அரசுகள், அதன் மீதான மறைமுக வரியை குறைக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ஒருங்கிணைந்த முறையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் சாதகமான முடிவை எடுக்கும் என்று நம்புவதாக தற்போது தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள், செலவு பக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை பலவிதமான செயல்பாடுகளில் செலவு மிகுதி காரணியாக உள்ளன. அதிக எரிபொருள் விலைகள், உற்பத்தி செலவிலும், போக்குவரத்து செலவிலும் மற்றும் பிற அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 

வரிகளைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. ஏனெனில் மறைமுக வரிகள் இருவராலும் விதிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு வருவாய் அழுத்தங்கள் இருப்பதையும், கரோனா அழுத்தத்திலிருந்து நாட்டையும், மக்களையும் வெளியே கொண்டு வர பெரிய அளவில் பணம் தேவை என்பதையும் நாம் உணர்கிறோம். ஒருங்கிணைந்த முறையில் மாநில மற்றும் மத்திய அரசு சாதகமான முடிவை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்