
2025 - 2026ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளின் போது, சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவை செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வழங்கினர்.
இந்த நிலையில், அதிமுக கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான் விவாதம் இன்று (17-03-25) நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. பெரும்பாலான நேரங்களில் ஒருதலைபட்சமாக சபாநாயகர் செயல்படுகிறார். ஆர்.பி. உதயகுமாரை துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையே 2 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏற்கப்பட்டது. அவைத் தலைவரின் செயல்பாடு சட்டமன்ற விதிகளுக்கு முரணானது.
தனிப்பட்ட முறையில் அப்பாவு மீது மரியாதை உண்டு. ஆனால், சபாநாயகராக அவர் சரியாக செயல்படவில்லை. நடுநிலையோடு அவையை நடத்துபவர் தேவை. சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதில்லை. ஆளுங்கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப குறைந்த நாட்களே சபாநாயகர் பேரவையை நடத்தியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் பேரவைக் கூட்டம் 116 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறையில் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தால் பேரவையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். சட்டப்பேரவையில் உள்ள 6 டிவிஷன்களிலும் எம்.எல்.ஏக்களை நிற்கச் செய்து வாக்குகள் பெறப்படும். டிவிஷன் முறை வாக்கெடுப்பை சட்டப்பேரவை செயலாளர் முன்னின்று நடத்துவார். வாக்குகளை பெறும் சட்டப்பேரவை செயலாளர் அதை எண்ணி துணை சபாநாயகரிடம் அளிப்பார். இந்த வாக்கெடுப்பில் பா.ஜ.க ஏற்கெனவே பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், பா.ம.க உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.