கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்று பள்ளியில் விட்டுவிட்டு மாலையில் பள்ளியில் இருந்து திரும்ப அழைத்துவந்து வீட்டில் விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுள்ளார். அப்போது 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை மட்டும் பள்ளியில் விடாமல் எதோ காரணம் கூறி தனது வீட்டிற்கு ஜெபராஜ் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் வைத்து சிறுமியிடம் ஜெபராஜை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைச் சற்றும் எதிர்பாராத சிறுமி, ஜெபராஜின் செயலால் அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டுக் கதறியுள்ளார். பின்னர், சிறுமியை சமாதானப்படுத்திய ஜெபராஜ், மீண்டும் சிறுமியை பள்ளியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமி அழுதபடியே பள்ளிக்குள் சென்றுள்ளார். மாணவி அழுதுகொண்டு இருந்ததை கவனித்த வகுப்பாசிரியர்கள் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஜெபராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஆசிரியரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த, ஆசிரியர் உடனே பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் ஜெபராஜ் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஜெபராஜை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.