இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதே சமயம் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர், “இந்தியாவில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் சீர்திருத்தம், 5 ஆண்டுகள் செயலாக்கம், 5 ஆண்டுகள் மாற்றம் என அரசு செயல்பட்டு வருகிறது. மனித குலம் சந்தித்ததிலேயே மிகப்பெரிய நெருக்கடி கொரோனா தொற்றுதான். அந்த கொரோனா காலத்திலும் நம் நாட்டின் வளர்ச்சி தடைப்படவில்லை. உலகையே அச்சுறுத்திய கொரோனாவை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளோம். இந்தியாவின் 17வது மக்களவை உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளது. 17வது மக்களவை 97% செயல்பட்டது. இதனை 100%ஆக செயல்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜி-20 மாநாட்டை நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா. ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்பதை நாடு உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு நாட்டுக்கு 2 அரசியலமைப்பு சட்டங்கள் இருக்கக் கூடாது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்து வரலாறு படைத்துள்ளோம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சமூகநீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதமே இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால். பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட புதிய சட்டங்களை இந்தியா உருவாக்கியுள்ளது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறினார்.