கேரளாவில் பெய்துவரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கோட்டயம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக கேரளா, பாலக்காடு மாவட்டம், மன்னர்காடு பகுதியில் நேற்று தொடர்ந்து நான்கு மணி நேரம் மிக கனமழை பெய்துள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த வனம் கொண்ட பகுதியாக இருக்கிறது. இங்கு மிக கனமழை பெய்ததின் காரணமாக வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடியது. இதனால், அந்தப் பகுதியில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மழை நின்றதால் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது.