இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், அதில் முக்கியமானது கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது. இந்தியாவில், கோவாக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட இரண்டு மட்டுமே அதிகளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. அதேசமயம், மக்கள் மத்தியில் இன்னும் கரோனா தடுப்பூசி குறித்தான அச்சமும் தேவையற்ற வதந்திகளும் நிலவி வரும் நிலையில், மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ நகரில் சால்காடி கிராமத்தில் வசித்து வரும் துலார்சந்த் முண்டா (வயது 55). கடந்த சில தினங்களுக்கு முன் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
துலார்சந்த் முண்டா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் முடங்கியும், பேசும் திறனை இழந்தும் பெரும் இன்னல்களைச் சந்தித்துவந்தார். மேலும், பேசுவதற்கும், மீண்டும் பழையபடி நடப்பதற்கும் அவர் பல லட்சங்களை செலவு செய்துள்ளார். ஆனாலும், அவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பின்னர் அதிசயம் ஒன்று நடந்துள்ளதாக கூறுகிறார் துலார்சந்த். அதன்படி, அவர் எழுந்து நிற்கிறார். நடந்து செல்கிறார். “எனது குரல் எனக்கு கிடைத்துவிட்டது” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இதனால் சுகாதார அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கி போயுள்ளார்கள்.
இதுபற்றி மருத்துவர் ஜிதேந்திரா குமார் கூறியதாவது; “இது ஆச்சரியமாக உள்ளது. முதலில் மருத்துவக் குழு ஒன்றை அமைத்து அவரது மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். சில நாள் பிரச்சனைக்கு பின் பழைய நிலைக்கு மீண்டால் அதுபற்றி புரிந்து கொள்ள முடியும். ஆனால், 4 ஆண்டு காலத்திற்கு பின் தடுப்பூசியால், இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார் என்பது நம்ப முடியாதது” என கூறியுள்ளார்.