
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கல் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கரோனா தடுப்பூசியைப் பாதுகாக்க குளிர் சேமிப்பு வசதிகளை மாநில அரசுகள் நிறுவ வேண்டும். தடுப்பூசியை அடித்தட்டு மக்களுக்கும் எடுத்துச் செல்ல மாநில அரசுகள் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விரிவான திட்டங்களை விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனுபவங்கள் மதிப்புமிக்கவை என்பதால் முடிவுகளை எடுக்க மத்திய அரசுக்கு இது உதவும். தடுப்பூசி தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி வழங்களில் கவனக்குறைவு இருக்கக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்
ஒவ்வொரு குடிமகனுக்கும் கரோனா வைரஸ் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்பதை தேசத்தின் லட்சியமாகக் கொள்ளவேண்டும். இந்தப் பணி முறையாகவும், தடங்கல் இன்றி சுமூகமாகவும் நடைபெற ஒவ்வொரு மாநில அரசும், அதிகாரிகளும் ஒரு குழுவாகப் பணியாற்ற வேண்டும்
எந்தத் தடுப்பூசிக்கு எவ்வளவு விலை என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியாவைத் தளமாகக் கொண்ட இரண்டு தடுப்பூசிகள் முன்னணியிலிருந்தாலும், நாம் உலகளாவிய நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம். மருந்துகள் கிடைத்த பிறகும், சிலருக்குப் பாதகமான எதிர்வினைகள் உள்ளன. எனவே விஞ்ஞான அடிப்படையில் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்
இந்நேரத்தில் வேகத்தைப் போலவே மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம். அனைத்து அறிவியல் தரங்களிலும் பாதுகாப்பாக இருக்கும் தடுப்பூசியே இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும். தடுப்பூசி விநியோகத் திட்டங்கள் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.