இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில் இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் பேசுகையில், “இடைக்கால பட்ஜெட் அறிக்கை வெறும் கண்துடைப்புதான். இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு நாமம் தான். ஏழை மக்களுக்கு நிதிநிலை அறிக்கை மூலம் எந்த பயனும் இல்லை. வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார்கள், கையசைத்தார்கள், சென்றார்கள். மக்களின் வரிப்பணத்தை வரிப்பணத்தை கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒரு மணி நேரம் தமிழ்நாடு அரசை வசைபாடினார். நிர்மலா சீதாராமன் பேச்சில் வன்மம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் லாபத்துக்காக 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீதுதான் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு ரூ. 37 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை. இதுவரைக்கும் எங்களுக்கு வந்தது பூஜ்ஜியம்தான். எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் அரசியல் லாபத்திற்காக 95 சதவித வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது தான் போடப்பட்டுள்ளன. எமர்ஜென்சியை போல் அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குகிறது. பிற்படுத்தப்பட்டோர் மருத்துவர் ஆகக்கூடாது என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது தான் நீட் தேர்வு. அய்யா பிரதமர் மோடி அவர்களே, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என்றீர்களே என்னாச்சு. கடந்த 10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்” எனப் பேசினார்.