Skip to main content

“இந்தியாவுக்கே வழிகாட்டியாக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்” - அமைச்சர் சக்கரபாணி!

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

Minister Chakrapani says CM mk stalin is implementing countless projects as a guide for India

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொத்தயம் மற்றும் முத்து நாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 18.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 44 மாதங்களில் 2,600 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 250 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 86 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டதில், இதுவரை 1.75 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரத்தில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காகத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

Minister Chakrapani says CM mk stalin is implementing countless projects as a guide for India

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக் கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டைக் குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காகக் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 இலட்சம் வீடுகள் கட்டுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 2000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் பழுதடைந்த வீடுகளைச் சீரமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

Minister Chakrapani says CM mk stalin is implementing countless projects as a guide for India

அனைத்து ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகக் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 2 கல்லூரிகள் மற்றும் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. அதில் அம்பிளிக்கையில் தற்காலிகமாகச் செயல்பட்டு வரும் கல்லூரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ரூ.7.00  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்குப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2,  தொகுதி 4 ஆகிய தேர்வுகளில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு நிதி வழங்கியுள்ளார்” என்று கூறினார்.

Minister Chakrapani says CM mk stalin is implementing countless projects as a guide for India

மேலும் முத்து நாயக்கன்பட்டியில் புதிய நியாயவிலைக்கடையைத் திறந்து வைத்து பொதுமக்களுக்குக் குடிமைப் பொருட்கள் வழங்கினார். அது போல் கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 2 பேருக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடனுதவிகள், 50 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். 

சார்ந்த செய்திகள்