நாடாளுமன்றத்தில் ஓய்வு பெறும் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான பிரிவு உபசார விழா இன்று நடந்தது. ஓய்வுபெறும் எம்.பி.க்கள் குறித்து உருக்கமாகப் பேசினார் பிரதமர் மோடி. குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் குறித்து பேசும்போது கண்கலங்கினார் மோடி! காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், சமீபகாலமாக காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத்தலைவரை நியமிக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்திவருபவர். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து, இவர் உட்பட 23 தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதி, அந்த கடிதம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
இந்த நிலையில், குலாம் நபியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலம் வருகிற 15-ந் தேதியோடு முடிவடைகிறது. காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு இன்னும் அங்கு சட்டசபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக குலாம்நபி தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாமல் இருக்க, இப்படிப்பட்ட சூழலில், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, "குலாம்நபியை உண்மையான நண்பராகக் கருதுகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக மட்டுமல்ல, இந்த நாட்டிற்காக உழைத்தவர். இந்த அவைக்காகவும் உழைத்தவர். அவர் வகித்த பதவிக்கு (ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்) புதிதாக யார் வந்தாலும் குலாம் நபியின் பணியைப் பூர்த்தி செய்திட முடியாது. இந்த அவையிலிருந்து அவர் வெளியேறினாலும் அவரது அறிவுரைகள் எப்போதும் தேவைப்படும். இந்த அவையில், அவர் முன்னெடுத்து வைத்துள்ள பல கருத்துகள் மிக ஆழமானவை. அவருக்கு நான் தலைவணங்குகிறேன்" என்று சொன்ன பிரதமர் மோடியின் கண்கள் கலங்கின. அதனைத் துடைத்துக்கொண்ட அவர், ’’சல்யூட் ஆசாத்’’ என்று சொல்லி நெற்றியில் கைவைத்து வணக்கம் தெரிவித்தார். பிரதமரின் இந்த உருக்கமான பேச்சும், குலாம்நபிக்கு அவர் கொடுத்த மரியாதையும் சபையில் இருந்த எம்.பி.க்களை உணர்ச்சி வயப்படுத்தியது!