கரோனா வைரஸ் பரவலால் தொழில்துறை கடுமையாக முடங்கியுள்ள நிலையில், நிதித்துறை தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைகளும்,அதற்கான திட்டமிடலும் நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும். அதேநேரம், ஜிஎஸ்டி, சுங்கவரி போன்ற பல்வேறு கணக்குகளைத் தாக்கல் செய்ய தொழிற்துறைக்குக் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீடிக்கப்படுகிறது. ரூ.5 கோடிக்குக் கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.
அதேபோல வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீடிக்கப்படுகிறது. காலதாமதமாகத் தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், ஆதார் - பான் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி தொழில்களை மேம்படுத்தும் வகையில், ஜூன் 30 வரை 24 மணிநேரமும் சுங்க அனுமதி வழங்கப்படும். அடுத்த மூன்று மாதத்திற்கு எந்த ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றாலும் எவ்வித கட்டணமும் பிடிக்கப்படமாட்டாது." எனத் தெரிவித்துள்ளார்.