திருமலை திருப்பதியில் அரசியல் பேசிய தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அது நாடு முழுவதும் பிரபலமடைந்து விடுவதால், சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், திருமலை கோயிலில் யாரும் அரசியல் பேசக்கூடாது என அறங்காவலர் குழு கடந்த மாதம் தடை விதித்திருந்தது.
இது குறித்து திருப்பதி அறங்காவலர் குழு தெரிவித்திருந்ததாவது, ‘எப்பொழுதும் கோவிந்த நாமம் முழங்கும் புனித திருமலையில், சமீப காலமாக, சில நபர்களும், அரசியல் தலைவர்களும், திருமலை தரிசனம் முடிந்து, ஊடகங்கள் முன்பு, அரசியல் மற்றும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி, திருமலையில் ஆன்மிகச் சூழலை சீர்குலைக்கின்றனர். எனவே, கோவிலின் புனிதத்தையும் ஆன்மீக அமைதியையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு தடை விதித்துள்ளது’ என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு வந்த தெலுங்கானா பி.ஆர்.எஸ்.கட்சியைச் சேர்ந்த முன்னாள அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுட், திருப்பதி கோயிலில் தெலுங்கானா பக்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து, தடையை மீறி கோயிலின் முன்பு அரசியல் பேசிய ஸ்ரீநிவாஸ் கவுட் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.