அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27- ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், அம்மாநிலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, இன்று (19/03/2021) அசாம் மாநிலம் திப்ருகார் என்ற இடத்தில், காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி எம்.பி., "அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 2,000 தரப்படும். அசாம் தேயிலை தொழிலாளர்களுக்கு ரூபாய் 351 தருவதாக பா.ஜ.க. வாக்குறுதி தந்தது. ஆனால், கொடுத்தது ரூபாய் 167 மட்டுமே. நான் நரேந்திர மோடி அல்ல; ஏனென்றால் நான் பொய் சொல்ல மாட்டேன். 'மேக் இன் இந்தியா' பற்றி மோடி பேசுகிறார்; ஆனால் ஃபோன், சட்டைகளில் 'மேட் இன் சீனா' என்று உள்ளது. நாம் பயன்படுத்தும் செல்ஃபோன்கள், சட்டைகளில் மேட் இன் இந்தியா, அசாம் என்று பார்க்க முடியாது. குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக பா.ஜ.க. இருப்பதால் நம்மால் இதைப் பார்க்க முடியாது. நாங்கள் சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறோம். புதிதாக 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்" என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
அடுத்தடுத்த நாட்களில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளனர். அசாமில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதுவதால் ராகுல் காந்தி அங்கு அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.