'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பு ஒன்று பீகாரில் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக பீகார், ஒடிஷா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் (16/06/2022) தொடங்கிய இந்த போராட்டம், தற்போது தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பு ஒன்று பீகார் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒடிஷாவின் பாலசூரில் மொஹந்தி என்ற இளைஞர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னதாக, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு 'குட் பை' என்று மெசேஜ் அனுப்பி, தனது பெற்றோரைக் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மொஹந்தி இந்த விவகாரத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறுகின்றனர் அவரின் பெற்றோர்.
ஏற்கனவே, தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் நடந்த 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற மோதலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
'அக்னிபத்' திட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.