Skip to main content

"மீண்டும் சட்டவிரோதமான முறையில் தடுப்புக் காவல்" -மெஹபூபா முஃப்தி தகவல்...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

mehbooba mufti claims she is detained again

 

 

தன்னை மீண்டும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு வழிவகை செய்யும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

 

இவர்களில் பெரும்பாலானோர் ஓராண்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், மெகபூபா முஃப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் அரசுக்கு பிறப்பித்த உத்தரவில், மெகபூபா முஃப்தி விடுதலை குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து 14 மாத தடுப்பு காவலுக்கு பிறகு மெகபூபா முஃப்தி கடந்த அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், தன்னை மீண்டும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "நான் மீண்டும் சட்டவிரோதமான முறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இரண்டு நாட்களாக புல்வாமாவில் உள்ள வஹீத் பாராவின் வீட்டுக்குச் செல்ல ஜம்மு, காஷ்மீர் அதிகாரிகள் எனக்கு அனுமதி மறுக்கின்றனர். பாஜக அமைச்சர்களும் அவர்களின் கைப்பாவைகளும் காஷ்மீரின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், எனக்கு மட்டும் பாதுகாப்பு ஒரு பிரச்சனையாக உள்ளது" எனத் தெரிவித்துள்ள அவர், தனது வீட்டின் முன்னாள் ஆயுதங்களுடன் காவலுக்கு நிற்கும் வாகனத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணி தலைவரான வஹீத் பாராவுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி கடந்த புதன்கிழமை என்ஐஏ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்