இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டை, இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு, 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் என்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென தனி அறிவிப்பும் எதுவும் வெளியிடவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே, அண்டை மாநிலமான கேரளாவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதிலளித்தார். கடந்த1ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கேரளாவை பின்தங்கிய மாநிலமாக அறிவித்தால் அதிக நிதி கிடைக்கும். எங்களிடம் சாலைகள், கல்வி வசதிகள் மற்றும் பிற விஷயங்கள் இல்லை என்று சொல்லுங்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கேரளா கூறினால், ஆணையம் சரிபார்த்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்” என்று பேசினார்.
கேரளாவுக்கு நிதி ஒதுக்க வேண்டுமென்றால், பின்தங்கிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து கேரளா மாநில அமைச்சர் பி.ராஜீவ், “குரியன் மாநிலத்தை அவமதிப்பது போல் உள்ளது. நேரம் கிடைத்தால் பொருளாதார ஆய்வறிக்கையை படிக்க வேண்டும். நிலையான வளர்ச்சி இலக்குகளில் கேரளா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இது யாருடைய தயவாலும் அல்ல. அரசின் கடின உழைப்பால் மட்டுமே” என்று கூறினார்.