
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து நிர்வாகிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாவட்டச் செயலாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று (31/01/20250 மூன்றாம் கட்டமாக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 19 மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை விஜய் வெளியிட்டார். இந்த சந்திப்பு ஆலோசனையின் பொழுது கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கியுள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 'உங்கள் உழைப்பில் தான் கட்சியின் வளர்ச்சி உள்ளது. நானும் உழைக்கிறேன் நீங்களும் உழையுங்கள். வெற்றி அடைவோம். களத்திற்கு செல்ல யாரும் தயங்கக் கூடாது. மக்கள் பிரச்சனைகளில் இனி தீவிரமாக இயங்க வேண்டும்' என விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்திருந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய்யை ஆதவ் அர்ஜுனா சந்தித்து கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அவருக்கு பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தகவல் தொழில்நுட்ப, சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச்செயலாளராக சி.டி.நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொள்கை பரப்புச் செயலாளராக ராஜ்மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். தலைமைக் கழக இணைப் பொருளாளராக ஜெகதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லயோலா மணி, சம்பத்குமார் ஆகியோருக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.