ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300 -க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் ஆங்கில ஆசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் இதுகுறித்து பவானிசாகர் போலீஸ் மற்றும் ஈரோடு சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மாணவிக்கு சாக்லேட், கேக் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஈரோடு, 46 புதூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் தண்டபாணி (55) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் தண்டபாணி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.