கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இதில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து அதை மக்களும் தவறாமல் போட்டு வந்தனர். கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதே போல், மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது.
இதில், கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிஷீல்டை, மத்திய அரசு அனுமதியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை, உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர். இதனால், இந்த நோய்த் தொற்று பரவலாக குறைந்து வந்து மக்களை பெருமூச்சடைய செய்தது.
தடுப்பூசிகளைப் பயன்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி வந்த அதே வேளையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும், உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவில்ஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகாவுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம் என்றும், ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம் என்றும், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம் என்றும் ஆஸ்ட்ராஜெனகா தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில், கோவிட் தொற்றுக்கான மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய 30 சதவீத பேர் பக்கவிளைவுகளை சந்திப்பதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களில் 30 சதவீதம் பேருக்கு தோல் நோய், சதைப்பிடிப்பு, நரம்பியல் பாதிப்பு, உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவாக்சின் பக்க விளைவுகள் பற்றிய பனாரஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்விற்கு தங்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறவில்லை. கோவாக்சின் "பாதுகாப்பு பகுப்பாய்வை" முன்வைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மோசமாக வடிவமைக்கப்பட்ட ஆய்விற்கு, தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. முறையாக ஆய்வு நடத்தாமல், பக்க விளைவு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஆய்வின் முடிவை திரும்ப பெற வேண்டும். ஆய்வை திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.