மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 'வேலையில்லாதவன்' என்று உறவினர்கள் அடிக்கடி கிண்டல் செய்ததால் 3 பேரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த பயங்கர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக்கில் உள்ள இகாத்புரி பகுதியில் மால்வாடி என்னும் கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் கணேஷ் சிமேட்(வயது 21), பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்து வேலை கிடைக்காததால் ஊரைச் சுற்றி வந்துள்ளார். இவர் வீட்டுக்கு அருகேயே, இவரது பெரியம்மா ஹிராபாய் சங்கர் சிமேட்(வயது 55) குடும்பமும் வசித்து வந்துள்ளனர். சச்சினின் பெரியம்மா குடும்பம், அவர் வேலையில்லாமல் ஊர் சுற்றுவதை கிண்டல் செய்தே வந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் இரு குடும்பத்தினருக்குமிடையே நிலப்பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால் மிகுந்த மனஅழுத்தத்துடனே இருந்திருக்கிறார் சச்சின்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சச்சினின் பெரியம்மா குடும்பத்தினர் வழக்கம்போல் சச்சினை கிண்டல் செய்துள்ளனர். ஆத்திரம் அடைந்தவர் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்து பெரியம்மா ஹிராபாய் சங்கர், ஹிராபாயின் மருமகள் மங்கள் கணேஷ் சிமேட்(வயது30) மங்கள் கணேஷின் இரண்டாவது மகன் ரோகித் (வயது4) ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்தச் சத்தம் கேட்டு ஓடிவந்த மங்கள் கணேஷின் மூத்த மகன் யாஷையும்(வயது 6) கொல்ல முயற்சி செய்துள்ளார், அச்சிறுவன் கழுத்தில் காயத்துடன் தப்பித்துள்ளார்.
பின்னர், அந்த இடத்திற்கு வந்த பொதுமக்கள் சச்சினை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் சச்சினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த சிறுவன் யாஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், கொலை செய்த சச்சினின் மீது ஐபிசி 302, 307, 326 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் நாஸிக் மாவட்ட டிஎஸ்பி அதுல் ஜின்டே தெரிவித்தார்.