காஷ்மீர் பிரிவினைவாதி மற்றும் ஜே.கே.எல்.எஃப் அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்த காவல் துறையினர் கோதிபாக் காவல் நிலைய சிறையில் அவரை அடைத்தனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தும் 35ஏ சட்ட பிரிவை மாற்றுவது தொடர்பான வழக்கில் வரும் திங்கள்கிழமை முக்கியமான விசாரணை நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் மாலிக், சையத் அலி ஷா கிலானி, ஷபீர் ஷா மற்றும் சலேம் கிலானியி உட்பட பல பிரிவினைவாதிகளின் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது. இந்நிலையில் தற்போது யாசின் மாலிக் கைது காஷ்மீர் பிரிவினைவாதிகளிடையே முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இந்த யாசின் மாலிக் தான் கடந்த 2013 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் போராட்டத்தில் கலந்துகொண்டார் என கடந்த மாதம் சமூகவலைதளங்களில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.