
மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்து வருகின்றனர்.
சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்திருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ.க தலைமை மகாராஷ்டிரா அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கியது. அதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு, வேளாண்துறை வழங்கப்பட்டு அவர் வேளாண்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். நாசிக் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையையும் மாணிக்ராவ் கோகடே வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், மாணிக்ராவ் கோகடே மீது கடந்த 1995ஆம் ஆண்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராம் டிகோலே என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ஏழைகள் என்று பொய்யாகக் கூறி நாசிக்கின் யோலேகர் மாலாவில் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நிர்மன் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை பெற்று, கோகடேவின் சகோதரர்கள் மோசடி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
30 ஆண்டுகளாக நடைபெற்று இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், முதல்வரின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் 2 குடியிருப்புகளை வாங்குவதற்காக போலி ஆவணம் தயாரித்த வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே மற்றும் அவரது சகோதரர் சுனில் கோகடே ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.